"உன் கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை . ஆயினும் உன்னுடையக் கருத்து சொல்லும் உரிமைக்காக என் உயிரையும் கொடுப்பேன்" வால்டர்
மேலே சொல்லி இருக்கும் மேற்கோளுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எவ்வித தொடர்புமில்லை. பிறகு ஏன் இதை எழுதி இருக்கிறேன் என்ற கேள்வி நியாமானதுதான்.. காரணம் ஒன்றும் பெரிதில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இப்படி ஆரம்பித்து இருக்கிறேன்.
ப்ரவின் - ஐ எனக்கு எனது கல்லூரி வாழ்க்கையின் ஆரம்ப தினங்களிலிருந்து தெரியும். எனினும் மிகுந்த நட்பு முகிழ்த்தது இல்லை. அதிகம் சாகசமில்லாத என்னுடையக் கல்லூரி வாழ்க்கையில் இவனை நண்பனாக்கி கொள்ளாதது ஒன்றும் பெரிய இழப்பாக தெரியவில்லைதான். கல்லூரியின் இறுதி ஆண்டில் சற்று நெருங்கினோம். இருவருடய புத்தக தேர்ந்தெடுப்புதான் அந்நெருக்கத்திற்க்குக் காரணம் என்று இந்த கணம் வரை எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவன் ஒரு வேளை, என்னைத் தவிர்க்க முடியாமல், என்னையும் என் புத்தக அறிவையும் சகித்து கொண்டிருந்தது கூட இது மாதிரி ஒரு பிம்பத்தை என் மனதில் ஏற்படுத்தி இருந்திருக்கலாம். அவனை கேட்டால் தான் தெரியும். இறுதி நாளில் கூட, ஸ்லாம் புக்கில் கையெழுத்து வாங்க எனக்கு பெரும் தயக்கமிருந்தது நினைவிருக்கின்றது. அவனை கடக்கையில், என்னைப் பார்த்து விட்டதால், வேறு வழியின்றிதான் வாங்கினேன். ஆனால் பதிலுக்கு அவன் என் கையெழுத்தை கேட்காதது, என் வாழ்வில் எனக்கு நேர்ந்து விட்ட பெருத்த அவமானமாக கருதினேன். இப்படி கழிந்து விட்ட கல்லூரி நாட்களுக்கு பிறகு, அவனை வாழ்வின் வேறு ஒரு பள்ளிக்கூடத்தில் சந்தித்து நண்பனானது வாழ்வின் வினோதங்களில் ஒன்றாகும். Life is uncertain.
சரி தமிழில் நிறைய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இருக்கையில் என்னுடய so-called நேர்ப்பார்வைக்கு என்ன அவசியம்? இதற்கான காரணமும் எளியதுதான். அவர்களின் கவனத்திற்கு இந்தப் படைப்பு கொண்டு செல்லப்படாமல் இருந்திருக்கலாம். இன்னும் நேர்மையானக் காரணம் வேன்டுமெனில் இப்படி சொல்லலாம். அவர்களின் நேரமின்மையும் எனது வேலையின்மையும் தான் காரணம். எனக்கும் சில காலங்களாக ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதின் மூலையில், சற்றுமுன் பிறந்த பூனையின் சத்தத்தை போல, தவிர்க்க முடியாததாக இருந்து கொண்டே இருக்கிறது.
CUT THE CRAP..
பெங்களூரூவின் ஒரு மதிய வேளைப் பூங்காக் காட்சிகள் இந்தக் கட்டுரையின் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறது. நகரத்தின் காதல்களும் காம வடிகால்களும் அதன் மீதான அதிகாரக் கட்டவிழ்ப்புக்களும்இவனுக்கு பல்வேறு உணர்வுகளை அளித்திருக்கின்றன. பிரமித்திருக்கின்றான். அதிர்ச்சியடைந்திருக்கின்றான். சந்தேகித்திருக்கின்றான். கோபமடைந்திருக்கின்றான்.ஆதங்கப்பட்டிருக்கின்றான்.நியாயமாக இவை சரியா தவறா என்று அலசுவதுதான் ஒரு விமர்சகனின் கடமை என்று நான் கருதினாலும் வேறு ஒரு கருத்தும் என்னை யோசிக்க வைக்கின்றது. அது யாதெனில், அவனுடையக் கருதுக்களை அவனது பளாக்-இல் அவன் பதிவு செய்வது அவனது உரிமை. அதை அவன் அனுமதியின்றி விமர்சிப்பது என்பது என்னுடைய உரிமை என்றாலும் கூட, ஒரு வகையில் அது அவனுடைய கருத்து மீதான அத்துமீறல் தானே? இந்த இரண்டுக் கருத்துகளில், இரண்டாவது கருத்து எனக்கு எல்லா வகையிலும் வசதியாக இருப்பதினால், நான் கருத்தை விமர்சிக்க போவதில்லை :)
சரி வேறு என்னதான் செய்ய போகிறேன்??
Commenting on just his writing style!
"ஃபாசிசத்தின் கட்டவிழ்ப்பு" என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பதன் மூலம் போலீஸ்காரனின் அந்த செயலுக்கு தான் முற்றிலும் எதிரானவன் என்று பதிவு செய்கிறார். எனக்கும் இதில் உடன்பாடுதான். ஆனால் பிறிதொரு பத்தியில் வரும் "பெண்கள் கூத்து" "நான் அங்கலாய்பு தாங்காமல் "தமிழ்ப் பொண்ணுகளுமா.." ன்னு கேட்டேன்" என்னும் வார்தைகள்தான் என்னை குழப்புகிறது. தமிழ்ப் பெண்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்னும் அடிமனது பழைய எண்ணமே இதற்குக் காரணம் என்று சொல்லி "நான் நுணுக்கமாக analyze செய்யும் பெரும் அறிவாளன்" என்று பிரஸ்த்தாபிக்கலாம்தான். ஆனால் இவ்வகை முரண்களுக்குக் காரணம் சிறிய அலட்சியம் தான் என்று எண்ணுகிறேன். இது போன்றவற்றை பிற்காலத்தில் தவிர்த்து விடுவான் என்றும் நம்புகிறேன்.
கலாச்சாரம் என்பது ஆதியில் நாட்டிற்க்கு நாடு வேறுபட்டிருந்தது. ஆனால் இன்றைய உலகில் அது மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கின்றது என்று சொல்வதே பொறுத்தமானதாக இருக்கும்.இத்தகையச் சூழலில் கலாச்சாரத்தில் அதிர்ச்சி என்றும், முறையற்றது என்றும் சொல்வது, போர்க்களத்தில் புத்த மதம் போதிப்பதற்க்கு ஒப்பானதொரு முட்டாள்தனமாகும்.இதேப் போன்ற ஒரு கட்டுரையின் விமர்சனத்தில் ஒரு எழுத்தாளர் "இது ஒரு கலாச்சார அதிர்ச்சி" என்ற வரியினை இறுதியான பத்தியில் பயன்படுத்தியதன் மூலம், தான் அந்த கட்டுரையில் சொல்லி இருந்த அத்தனைக் கருத்துக்களுக்கும் உண்மையில் தான் எதிரானவன் என்று தன்னை அறியாமல் ஒப்புக் கொண்டிருந்தார். இது போன்றதொரு விபரீதம் எதுவும் இவனுடைய எழுத்துக்களில் நிகழாதது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றபடி, கயோஸ் தியரி, டாக்ஸி டிரைவர்களின் குழந்தைகள் போன்ற உதாரணங்களை நான் பெரிதும் ரசித்தேன். நகிசா ஒஷிமோ என்ற ஜப்பனிய இயக்குனருடைய ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை, அதில் உள்ள கிளர்ச்சியடைய வைக்கும் காமம் கருதியே இவனிடம் பகிர்ந்துக் கொண்டேன். அதிலிருந்த ஒரு அருமையான மேற்கோளை இவன் கையாண்டிருந்த விதம் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இவன் ஒரு நல்ல எழுத்தாளனாவதற்கான எல்லா தகுதிகளும் என் சிற்றறிவுக்குத் தெரிவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
இறுதியாக, எழுத்துப் பல வகைப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். சிற்றிலக்கியம், பெரும் இலக்கியம், மரபு எழுத்து, நவீன எழுத்து, பின்னவீனத்துவம், சர்ரியலிஸம் போன்றவை அவ்ற்றில் சில. ஆனால் ஒரு சாமான்யனை பொறுத்த வரையில் எழுத்து இரண்டே வகைப்படும். படித்தால் புரிவது ஒரு வகை.எத்தனை முறை படித்தாலும், எழுத்தாளனின் மேதைமயை பறை சாற்றுவதற்காக எழுதப்பட்டதினால் புரியாத இரண்டாவது வகை. நல்ல வேளை, இவன் முதல் வகையைச் சேர்ந்தவன்.
0 Responses to சித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும் - ஒரு நேர்ப்பார்வை
Something to say?