என்றும் இன்பம்-1
எப்பொழுதும் போல் அன்றிரவும் வெகு சாதரணமாகத்தான் சரக்கடிக்க ஆரம்பித்திருந்தோம். பிரளயத்துக்கு முன்பான அமைதி போலத்தான் இதுவும் என்பது,அவனுடன் கழித்திருந்த இரு வருடம் எனக்களித்திருந்தப் பாடம். குடிப்பதற்கு முன்னே அவன் செய்யும் முன்னேற்பாடுகள் சுவாரஸ்யமானது. அவற்றில் ஒன்று, பாட்டில் வாங்கிய கறுப்புக் கவரை, தன் சட்டையின் இரண்டாம் பொத்தானோடுக் கோத்துக் கொள்வது. உடல் ஒத்துழைக்காமல் பல சமயங்களில் வாந்தி எடுக்க வேண்டியிருக்கும்.அவ்வாறான சோதனை மிகுந்தத் தருணங்களில், கழுத்துடனிருக்கும் கவரிலேயே எடுத்துவிடுவது உசிதமல்லவா? மேலும் துளசிராம் வாந்தி வருவதும்,தகுதியற்றவர்கள் அரசியலுக்கு வருவதும் ஒன்றே என்று மிக உறுதியாகக் கருதினான். எப்பொழுது வரும், எப்படி வருமென்பதைக் கணிக்க இயலாமையே இந்த கருத்துக்கான ஆரம்பப் புள்ளி.
இரண்டுப் பெக்குகளுக்கு பிறகு சட்டென்று எழுந்தான்.பெரும் போதை.
'வோட்காவயும் தாத்தாவிஸ்கியயும் குடுத்த ரஷ்யாவுக்கு என்னோட சல்யூட் டா' என்றான். வோட்கா தெரியும், தாத்தா விஸ்கின்னா என்னது? அவன் தாத்தா அவனுக்கு குடுத்த விஸ்கியா? அப்படியே குடுதிருந்தாலும் இவன் எதுக்கு ரஷ்யாவுக்கு சல்யூட் அடிக்கரான்? தாத்தாவுக்ல அடிசிருக்கணும்?- இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வருகிறதல்லவா? ஆனால் எனக்குக் குழப்பமில்லை.அவன் தாத்தாவிஸ்கி என்று குறிப்பிட்டது ரஷ்ய மேதை தஸ்தாயெவ்ஸ்கியைத்தான். நாங்கள் குடித்துக் கொண்டிருந்ததும் வோட்கா இல்லை பிராந்திதான் என்பதை இப்பொழுது பொருட்படுத்த தேவையில்லை.அவ்வாறு சொல்லிவிட்டு ஒரு சிறு அமைதி. போதையினால் சொருகிய கண்களும் உதட்டில் ஒரு குறுஞ்சிரிப்புமாக என் முகத்தையேப் பார்த்தான். அவனுடைய உலக இலக்கிய அறிவையெண்ணி நான் அடையப் போகும் ஆச்சர்யத்தையும் அதைத் தொடரும் குழப்பத்தையும் காண்பதற்காகவே இந்த சிறு அமைதி. யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்லிவிட்டதாக நினைக்கும் பொழுது அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது மனித இயல்புதான். ஆனால் துளசிராமிடம் என்ன பிரச்சினையென்றால் எதிராளியின் சிற்றறிவுக்கு அந்த விஷயம் தெரியுமா இல்லையா என்பதை யோசிக்க மறுப்பதுதான்.முன்பொருமுறை இப்படித்தான், நாய் தன் காலைத் தூக்கித்தான் சிறுநீர் கழிக்கும் என்றப் பேருண்மையை சொல்லியதற்காக நான் அவனை அங்கீகரிக்கவில்லை என்று கோபித்திருக்கிறான்.
நான் முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அமர்ந்திருந்தேன். விஷயம் இதுதான். ஒரு பிரபல எழுத்தாளர் போதை மிகுந்த ஒரு இரவில் இதே மாதிரி கூறியதாக அவருடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை காலையில்தான் இருவரும் பேசியிருந்தோம்.இப்போது அதை தன் கருத்தாகச் சொல்கிறான். அந்த சிறு அமைதி சற்று நீண்டு ஏழு நிமிடங்களை கடந்திருந்தது.இனியும் தாமதித்தால் அவன் வாந்தியெடுத்துவிடும் அபாயமிருப்பதை உணர்ந்து,
'அப்டீங்கறே??' என்றேன், பலவீனமாக.
ஏதோ ஒரு வகையில் அவன் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லையென்பதை உணர்ந்து கொள்ள ஏழு நிமிடங்கள் அவனுக்குப் போதுமானதாக இருந்திருக்கவேண்டும்.
'ஆமாண்டா' என்றவாறு க்ளாஸிள் மீதமிருந்த பிராந்தியை 'மடக்'கென்று ஒரே மூச்சில் குடித்தான். பொறுப்பாக அடுத்த ரவுண்டுக்காக சரக்கை இருவருக்கும் கலந்து வைத்து, காது வரையில் சிரித்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து என் முகத்தில் ஊதினான். பின்பு எதற்கோ அண்ணாந்துப் பார்த்தான். அவன் செய்கைகள் ஒன்றுகொன்று தொடர்பில்லாமல் இருந்தன. நானும் பாதி மயக்கத்தில் இருந்ததால் கண்டுக் கொள்ளவில்லை.போன வருடம் புதிதாக வந்த ஒரு அறை நண்பன், மது மயக்கிய ஒரு பொழுதில், இவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்து தனக்குள் கேலியாக சிரிப்பதை துளசிராம் பார்த்துவிட்டான். நாங்கள் மூவரும் சேர்ந்து குடிக்கும் முதல் முறையாதலால், துளசிராமின் அணுகுமுறை சற்று மிதமாகவே இருந்தது.
'எதுக்கு நண்பா சிரிச்சீங்க?' - இது துளசி.
'ஹி..ஹி.. ஒண்ணுமில்ல..சும்மாதான்..ஹி ..ஹி..' - இது அறை நண்பன்.
'அட சும்ம சொல்லுங்க பாஸூ'
'இல்ல..நீங்க பண்றத பார்த்தா ரொம்ப தமாஸா இருந்தது..அதான்..சரி விடுங்க..வேறப் பேசுவோம்'துளசிராமோ விடா முயற்சி வேந்தன். மேலும், அழுத்திக் கேட்டதில் அவன் சொல்ல ஆரம்பித்தான்.
'பின்ன என்னங்க பாஸூ..இதுக்கே இவ்வளவு அலம்பலு பண்றீங்களே?? நான்லாம் ஒரு ஃபுல்லு முழுசா அடிச்சாக் கூட அப்படியே இருப்பேன்..வித்யாசமே தெரியாது' என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்..
'அப்புறம் என்ன மயித்துக்கடா குடிக்குறீங்க?' என்று அவன் மேல் பாய்ந்துப் புரட்டியெடுத்துவிட்டான். இது வேறுத் தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்ததால் அவனை அவன் போக்கில் விட்டுவிட்டேன்.தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று க்ளாஸை கையிலெடுத்துக்கொண்டு என்னையும் குடிக்குமாறு சைகை செய்தான்.புரிந்துவிட்டது. மேலும் பேசுவதற்கான ஏதோ ஒன்றை முடிவு செய்துவிட்டு, அதை கேட்பதற்காக என்னையும் தயார் செய்கிறான். நான் பிராந்தி ஒரு மிடறு விழுங்கிவிட்டு, வெட்டக் காத்துக் கொண்டிருக்கும் பலியாடுப் போல் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
'மாப்ள, வைத்தீஸ்வரன் கோயிலப் பத்தி நீயென்ன நினைக்குற?'
'நான் ஒண்ணும் நினைக்கலியேடா' என்றேன் பரிதாபமாக.
பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல பயங்கரமாகச் சிரித்தான்.கண்ணில் நீர் வரச் சிரித்தான். இது ஒன்றும் என் நகையுணர்வுக்கானப் பரிசு இல்லையென்பது எனக்குத் தெரியும். இது ஒரு தந்திரம்.இதன் பிறகு அவன் சொல்லும் ஏதாவதொரு பதிலுக்கு நானும் இப்படி சிரிக்கவேண்டுமென்பதற்கான சிறு அச்சாரம்.அப்படி இல்லாத பட்சத்தில் நான் நன்றி மறந்தவனாகிறேன். என் இறையாண்மைக்கு வந்தப் பெருஞ்சோதனை.ஆங்கிலப்படங்களில், தண்ணீருக்கடியில் உயிர் விடும் காட்சியில், இறப்பவனின் இறுதி மூச்சு இரண்டு மூன்று நீர்க்குமிழிகளாக மேலெழுந்து வருவதைப்போல, அவ்வபோது மெலிதான சிரிப்பு அவனிடத்தில் பொங்கி வழிந்தவாறு இருந்தது. எங்கே சிரிப்பைப் போலவே, அவன் குடித்த பிராந்தியும் பொங்கி வழிந்துவிடுமோ என்றஞ்சி ,என் விழிப்புணர்வின் ஒரு பகுதியை எப்பொழுதும் தயார்நிலையிலேயே வைத்திருந்தேன்.
'சொல்றா..நீ என்ன நினைக்குற??' சிரிப்புனூடேக் கேட்டான்.
வைத்தீஸ்வரன் கோவிலில் ஏடு எடுத்துப் பார்த்து முக்காலத்தையும் சொல்வது நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே.எனக்கும் தெரியும்தான். ஆனால் அவ்வாறு தெரியுமென்றுக் கூறி, மேதைமையைப் பறைசாற்றுவதெலாம் அறிவீனர் செயலாகும். அதற்கானக் காரணம் 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்கிற அமரத்தத்துவம்தான் என்றெல்லாம் கதை விடமாட்டேன். எனக்கு இது பற்றி தெரியுமென்று அவனுக்குத் தெரிந்துவிட்டால், பின்பு இன்னும் கடினமான விஷயத்தை பற்றி ஆரம்பித்து விடுவான். ஆறு மாதங்களுக்கு முன்பு இதேக் காரணத்துக்காக, ஸ்பானிஷ் நாடோடிப் பாட்டுக்களைப் பற்றி நான்கு மணிநேரம் என்னிடம் பேசினான் என்றால் நீங்களேப் புரிந்து கொள்ளுங்கள்.ஸ்பானிஷ் பாடல்களை ராகத்தோடுப் பாடி வேறுக் காட்டினான் என்னும் போது, அதே தவறை மீண்டும் செய்ய முற்படுவேனா?
'வைத்தீஸ்வரன் கோயிலா? சாமியிருக்கும்டா..ஹி..ஹி..' என்றுப் பொதுவாகச் சொல்லி வைத்தேன்.அவன் என் பதிலில் கிஞ்சித்தும் திருப்தியடையவில்லை என்பது அவன் விழியில் காட்டிய உக்கிரத்திலேயேப் புரிந்தது. ஆனால் துளசிராம் இதற்கெல்லாம் அஞ்சுபவனில்லை.
'அங்கப் போகணும்டா..ஏடு எடுத்துப் பாத்தா நம்ம ஹிஸ்ட்ரி தெரிஞ்சுக்கலாம்டா..நீ என்ன சொல்ற?'
நான் எதுவும் சொல்வதற்கு முன்னே, அவன் வைத்தீஸ்வரன் கோவில் செல்லவேண்டியதன் அவசியத்தையும் காரணங்களையும் விளக்க ஆரம்பித்துவிட்டான். அதை அடுத்த அரைமணி நேரம் தொடர்ந்தான்.நானும் அவ்வப்பொழுது என் மாற்றுக் கருத்துக்களை அவனிடத்தில் பதிவுச் செய்யத்தவறவில்லை.எனினும் அவை அவனைச் சென்றடைந்ததா என்பதுக் கேள்விக்குரியதே. பயல் வெளி உலகத் தொல்லைகளில்லா ஏகாந்த நிலையை எட்டியிருந்தான். அத்தகையதொரு நிலையில், எதிராளியின் பதில் என்ன, பூகம்பமே நிகழ்ந்தாலும் அவன் பேச்சை நிறுத்த போவதில்லை. 'பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்..' என்கிற செய்யுளின் புதிரை அவிழ்க்குமாறு கேட்டான்.கேட்டுவிட்டு அவனே அவிழ்ப்பதாக மேலும் தொடர்ந்தான்.நிறுத்துவதாய்த் தெரியவில்லை.
நண்பர்கள் கூடி தண்ணியடிக்கும் பொழுதுகளில், எவனாவது ஒருவன் நிலை கொள்ளாப் போதையில் சொற்பொழிவு நிகழ்த்துவது வாடிக்கையானதே. அதை மற்றவர்கள் ஆமோதித்துக் கேட்குமாறு எதிர்பார்த்து வற்புறுத்தப்படுவதுக் கருணையற்றதாகும். அதற்குப் பேசாமல் எழுந்து சென்றுவிடுவது உத்தமமான செயல்.ஆனால் சரக்கு வாங்கித் தந்தவனே, இவ்வாறு சொற்பொழிவாற்றி நம்மை துன்ப நதியில் தள்ளும் சமயங்களில், கடவுள் செயல்படும் விந்தையான வழிகளையெண்ணி வியப்பிலாழ்வதை தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், இது மாதிரியான 'Catch 22' சூழ்னிலைகளில் இரண்டு வழிகளைப் பின்பற்றி வந்திருக்கின்றேன்.
முதலாவது,'ஆமாண்டா மச்சான்','கரெக்ட்டுடா','நானும் அதயேதான் நெனைக்குறென்,'நாம வேற என்னப் பண்ண முடியும்னு நெனைக்குற?' போன்ற Fillersகளை,சீரான இடைவெளியில் சொல்லி வருவதாகும். இது நாம் சொற்பொழிவாளனின் பேச்சை ஊன்றி கவனிப்பதுப் போன்றதொரு மாயையை அவனுக்குத் தருவதால், மேலும் தொந்தரவு செய்யாமல், அவன் பாட்டுக்குத் தொடர்ந்துக் கொண்டிருப்பான்.அதிலும் 'நாம வேற என்னப் பண்ண முடியும்னு நெனைக்குற?' என்னும் கேள்வி, சொற்பொழிவாளன் பேசும் எந்தவொருத் தலைப்புக்கும் பொருந்துவதோடு, அவனின் எண்ணச் சுடரையும் தூண்டிவிடுவதால், அவன் பெருமகிழ்ச்சியடைவான். இருந்த போதிலும், இந்த வழியைப் பின்பற்றுவதைச் சில காலத்துக்கு முன்பிருந்து நிறுத்தி விட்டேன்.காரணம் மிகவும் ரகசியமானது என்ற போதிலும் உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்.
ஒரு முறை,நான் மதுவின் கருணையால், உற்சாகத்தில் மிதந்து, இன்ப ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கையில்,என்னிடம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த சகப் பயணியொருவன், என்னை திடீரென்று அறைந்துவிட்டான். அதை உணரும் நிலையிலும் நானில்லை.ஆனால் மேற்கொண்டு அவன் என்னைக் கொல்ல எத்தனிகையில்,என் நண்பர்கள் காப்பாற்றி விட்டனர். மறுநாள்தான் எனக்கு விஷயம் விளங்கியது. தன்னுடைய மேலதிகாரி, வேசிமகன் என்று ஆங்கிலத்தில் திட்டியதை, ஆதங்கத்துடனும், கண்களில் கண்ணீருடனும் என்னிடம் அவன் புலம்பியப்போது, 'நானும் அதயேதாங்க நெனைக்குறென்' என்று நான் கூறியதே அந்தக் கொலை முயற்சிக்கானக் காரணம். காலம் கலைத்து உருட்டும் பகடைகளின் நிலையே, நிகழும் செயல்களின் தன்மையைத் தீர்மானிக்கும். அன்றிரவு எங்களிருவருக்குமானப் பகடைகள் மோசமானதொருக் கட்டத்திலே விழுந்திருக்க வேண்டும். Life is a game of uncertainity இல்லையா?? அன்றிலிருந்து Fillers களைப் புறக்கணித்து விட்டேன்.
இரண்டாவது வழி எதிராளிக்கு சற்றுக் கடினமானது என்றாலும் உயிர் பயம் இல்லையாதலால், இவ்வழியையே உபயோகிக்கிறேன். சொற்பொழிவாளன் எந்நிலையில்
பேசிக்கொண்டிருந்தாலும், சற்றும் யோசிக்காது அவன் பேச்சை முடிக்க வேண்டும். 'சரி சரி விடுடா...தூங்கலாம்' இல்லை 'போதும் விடேன்டா..ஏன் இப்படி பேசியேக் கொல்ற??' என்றோ சொல்லிவிட்டு அவனை படுக்க வைப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கி விடுவேன். இது அவன் பேச்சை மதியாத செயலாய் இருப்பினும், அவன் மீதான நம் அக்கறையைக் காட்டுவதாகத் தவறாகயெண்ணி, சமயங்களில் எதிராளி அழவும் கூடும்.அவ்வாறு அழுவானெனில், அவனைத்தேற்ற விழைவது கற்றோர் செய்யத் துணியாக் காரியமாகும். ஏன் கூறுகிறேனென்றால், இவ்வாறு உணர்ச்சி மிகுதியால், போதையில் அழுபவரை தேற்றவே முடியாது.மீறி முயன்றால், பல மணிநேரங்கள் செலவிட வேண்டியிருக்கும். ஒரு முறை, விடிந்தே விட்டது. இது நான் அனுபவத்தில் கண்டுணர்ந்தப் பாடம். எது எப்படியிருப்பினும் அதன் பிறகு எதிராளியால் பழைய வேகத்தில் பேசமுடியாதென்பது மட்டும் திண்ணம்.
'சரி சரி விட்றா..தூங்கு..' என்றேன் சம்பந்தமில்லாமல். அது வரையில் தான் பேசியது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதிருப்பினும், அத்தகையதொருப் பதிலை நான் சொன்னதற்காக முறைத்தான்.
'என்ன வெளாடுறியா?? வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போலாம்டா..' என்றான்.
'சரி போலாம்..காலைல போலாம்... இந்நேரத்துக்கு பஸ்ஸிருக்காது' கடுப்பில் சொன்னேன்.
'என்னப் போதைல உளறேன்னு நெனைக்குறியா?? காலைல நாம கண்டிப்பா போறோம்' என்று அறிவித்தான்.
நான் இதற்குள் படுத்துத் தூங்க ஆரம்பித்தேன். துளசிராம் பேசுவது நெடுந்தொலைவில் மெலிதாகக் கேட்டது தாலாட்டு பாடுவதுப் போலிருந்தது. தூங்கி விட்டேன்.மறுநாள், எழுந்துப் பார்க்கையில் அறையின் நிலைமை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அறையெங்கும் சிதறிக் கிடந்தப் பாலிதீன் பைகள், பாட்டில், உணவுப்பொட்டலங்கள்,சிகரெட் துண்டுகள், தீக்குச்சிகள் எதையும் காணவில்லை. அறை மிகவும் சுத்தமாக இருந்தது. இது என் தினப்படி வாழ்கையில் நான் சந்தித்திராத ஒன்று. நான் தூங்கியப் பிறகு, தான் செய்த ரகளையினால் ஏற்பட்ட குற்றவுணர்வின் மிகுதியால், அறையை சுத்தம் செய்துவிட்டே துளசிராம் தூங்கி இருக்கவேண்டும்.இன்னும் அவன் எழுந்திருக்கவில்லை. புகைப் பிடித்தவாறு பால்கனியில் நின்றிருந்தேன்.எழுந்து வந்தவன், இருவருக்கும் காப்பி ஆர்டர் செய்தான்.என்னைப் பார்த்ததும் நேற்றிரவு செய்த சலம்பல்கள் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒருமாதிரி நெளிந்தான்.காப்பிக் குடித்து முடித்தவுடன் கேட்டேன்,
'என்னடா, வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போவோமா?'
ஒரு சிறுத்தயக்கத்துக்குப் பின்,'போலாமே' என்று ஈனஸ்வரத்தில் முனகினான்.இருவரும் சட்டென்று அடக்கமுடியாமல் சிரித்தோம்.